Monday, August 2, 2010

அதிசய பெண்ணோ!!

மல்லிகை பூங்கிடங்கோ?-நீ
மன்மத தேன்விருந்தோ
நிலத்தில் நடக்கையில்
நிழலும் சிரிக்க
பெண்ணே நீதான்
பிரம்மனின் அற்புதமோ?

சிரித்திடும் பால்நிலவோ?-நீ
சிலைகளில் புதுவரவோ?
இமைகள் கொண்டே
இதழின் மொழிகள்
பேசும் நீதான்
பேரழகு ஓவியமோ??

நகங்கள் விண்மீனோ?-நீ
நடந்திடும் பெண்பூவோ?
உடைகள் அணியும்
உன் உடல்
அலையின் நுரையில்
அடித்து வடித்தோ??

தேனினத்தின் சன்னதியோ?-நீ
தேவதைகளின் சந்ததியோ?
நூலாடை மறைக்கும்
நூதன பாகங்கள்
பேரேட்டில் சொல்லாத
பெண்ணினத்தின் சங்கதியோ?

வானத்தின் மேகமோ?-நீ
வசந்தத்தின் ராகமோ?
சோகங்கள் எதையும்
சொல்லாத உன்னிதயம்
தடைகள் வந்தாலும்
தளராத செந்தமிழோ?

நனைந்த புதுமலரோ?-நீ
நடமாடும் பூந்தென்றலோ?
நந்தவனப் புற்களில்
நடைபயிலும் பாதங்கள்
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்களோ?

ஜொலித்திடும் அங்கமே-நீ
ஐந்தடி தங்கமே
கண்களால் கண்டேன்
கவிதையில் சொன்னேன்
"அன்பே நீதான்
அழகுகளில் உச்சமே!"

நாக்கை அறுத்தெறிவோம்!!

பூங்காவில் புயலை போல
மனித மனங்களில்
மதங்கள் வீசியது!!
புயல் போன பின்னாலே
நிமிரும் பூங்கொடிகள் கொஞ்சம்!!
உயிர் போன பின்னாலும்
மாறவில்லை
மனித நெஞ்சம்!!

உயிர் காக்கும் கடவுள்களா
உயிர் போக காரணங்கள்?
கடவுள் வரும் பாதைக்கு
மனித எலும்புகளா தோரணங்கள்??

பூஜைக்கு
பூப்பறித்த கைகளில்-இன்று
ஆயுதம்
அறுவடை செய்கிறார்கள்!
அன்பை போதித்த கடவுள்கள் எல்லாம்
அமைதியாய் ஏனோ இருக்கிறார்கள்!!

எல்லோர் கண்ணீரும் கரிக்கும்தான்
எல்லோர் ரத்தமும் சிகப்பேதான்
உடைகள் எல்லாம் தொலைத்தோமானால்
நிர்வாணம் என்பதும் ஒன்றேதான்!!

வெடித்து சிதறும் உடல்களில்
ஆணும் பெண்ணுமே உண்டு
ஆறடி குழியில் புதைந்தபின்
இந்து முஸ்லிம் ஏது?

கடவுள் பேரில் போர்களேன்றால்
மனிதன் வாழ்வது எப்படியோ?
மனிதன் இங்கே இல்லையென்றால்
கடவுள் வாழ்வதும் எப்படியோ??

முருகனே பெரியோன் என்றோ
அல்லாவே சிறந்தவன் என்றோ
கிறிஸ்துவே உயர்ந்தோன் என்றோ
எவர் சொன்னாலும் கூப்பிடுங்கள்
அவர்கள் நாக்கை நாமும் அறுத்தெறிவோம்!!
மதங்கள் இல்லா
மனித சமூகத்தை
ஒன்றாய் நாமும் அமைதிடுவோம்!!

Sunday, July 18, 2010

பதில் வேண்டி!!

மின்னல்கள் அடுக்கி வைத்து
மின்மினி பதியம் போட்டு
மின்னிடும் ஆசை பெண்ணே-உன்
புன்னகை என்ன விலை?

சிந்திடும் வேர்வைத் துளி
தந்திடும் காதல் கனா
வந்திடும் இதழ் வார்த்தைகள்-என்
வண்ணமே என்ன விலை?

பார்க்கையில் மென் காற்று
பக்கத்தில் சர்க்கரை ஊற்று
பஞ்சத்தை பார்த்திடா மேனி-உன்
பருவங்கள் என்ன விலை?

நகர்ந்திடும் சோலை மலர்கள்
நழுங்கிடும் எந்தன் கண்கள்
செழித்திடும் உந்தன் அழகு-என்
செல்லமே என்ன விலை?

வரமாக வந்த நிலா
தரணியில் செல்லும் உலா
சிரபுஞ்சி ஈரம் சிந்தும்-உன்
சிரிபொலி என்ன விலை?

சந்தங்கள் தமிழ் மணக்கும்
சொந்தமாய் நீ வந்தால்-அதிலும்
முந்திடும் உன் நினைவு-என்
முல்லையே என்ன விலை?

சாய்ந்திடும் என் நெஞ்சம்
பாய்ந்திடும் உன் பக்கம்
என்னையே விலையாக தருகிறேன்-உன்
இதயமோ என்ன நிலை?

செய்துவிடு!!இல்லையேல்!!

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!

செல்லாத கனவுகளில்-உன்னிடம்
சொல்லாத காதல் அலை
பொல்லாத பிரிவிற்கு-என்னை
கல்லாய் நீ செய்துவிடு!!

சுற்றதா பூஉலகே-உன்னில்
பற்றாக நானுள்ளேன்-என்னில்
வற்றாத உன் நினைவை-மட்டும்
முற்றாமல் நீ பார்த்துவிடு!!

இல்லையேல்...

கோளற்ற பால்வீதி-ஒரு
நாளற்ற நாட்காட்டி-பிடி
நூலற்ற பட்டம் போல்-இனி
நீயற்ற நானாவேன்!!

கண்ணுக்குள் கண்ணாக-என்னையுன்
எண்ணத்துள் வைக்காமல்-மின்னும்
பொண்ணுக்குள் வைத்தாலும்-நான்
மண்ணுக்குள் புதைந்த சருகாவேன்!!

நிறைந்த நெஞ்சத்தில்-காதல்
நுரைந்து பொங்கி-நீ
விரைந்து வாராமல் போனாலோ-காற்றிலே
கரைந்த கற்பூரம் போலாவேன்!!

சத்தான காதலதை-நான்
முத்தாக சுமக்கின்றேன்-பரிசு
பித்தாக்கும் பிரிவென்றால்-நான்
செத்தாளைப் போலாவேன்!!

ஆதலால்..

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!

Wednesday, June 30, 2010

உன் நினைவில்!

புலன் ஐந்தை

புதுப்பிக்கும்

புல்வெளியில் படுத்திருந்தேன்!!

பூஞ்சாரல் மேகமில்லா

புதுவானம் பார்த்திருந்தேன்!!

பூப்போல உன்முகம்-என்

நினைவெளியில் வந்தவுடன்!

ஓர்வண்ண வானத்தில் -நான்

ஏழ் வண்ணம் பார்த்திருந்தேன்!!

பல்லவ சிற்பங்கள்-என்னை

பகடியாய் பார்த்திருக்க

பாறையின் இடுக்கிலும்-உன்

பால்முகம் ரசித்திருந்தேன்!!

காலில்லா காற்றுக்கு

சலங்கைகள் கட்டிவிட்டு - அதன்

ஜதி சொல்லும் பாதத்தில்-உன்

சுவடுகள் பார்த்திருந்தேன்!!

திசை எட்டும் உன் பிம்பம்

தீபம் போல் ஒளிர்ந்திருக்க!!

என் கண்ணீரின் தடத்தை

காதலால் அடைத்திருந்தேன்!!

எங்கேயோ ராகங்கள்

ஒலியினில் சேர்ந்திருக்க

பெயரில்லா ரகத்திற்கு-நான்

வார்த்தைகள் அடுக்கிவைத்தேன்!!

கடல் கொண்ட அக்கரையை

காவலுக்கு வைத்துவிட்டு!

உன் பிரிவால் நான் மட்டும்

இக்கரையில் வாடுகிறேன்!!

எத்தனையோ நாளாகியும்

எட்டாத நிலா பிடிக்க

ஆர்பரிக்கும் அலைகளுக்கு-நான்

ஆதரவாய் நிற்கின்றேன்!!

இயற்கையிடம் பேசுவதாய்

இதயத்தை சொல்லிவிட்டு

எழுத்துக்கள் கோர்துவைத்து-உன்னை

எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!!

======================================================

வங்காள விரிகுடாவின் வயிட்ட்றுப் பகுதியான மாமல்லபுரத்து கடற்கரையில் அமர்ந்து எழுதியது.

======================================================

பழைய நொடிகளும் முகங்களும்

கடந்த நாட்களை

திரும்பிப் பார்க்கிறேன்

என்

ஞாபக குளமெங்கிலும்

நீரலையாய்

நினைவலைகள்!!

மார்கழிப் பனியில்

அம்மா கோலம் போடுகையில்

காதை மூடியபடி-வாசலில்

அமர்ந்திருந்ததும்!!

அம்மிக் கல்லில்

சட்னி

அறிக்கையில்

சிதறிய தேங்காய் சில்லையும்

விலகிய பொட்டுக் கடலையும்

வாயில் போட்டதும்!!

காலாண்டு தேர்வில்

குறைந்த மார்கிற்காய்

அப்பா அடித்ததும்

சற்று நேரத்தில்

அழுகை நிற்க

தேங்காய் பண்

சாப்பிட்டதும்!!

இன்னும்

என் ஞாபக வங்கியில்

இருப்பாய்

இருக்கிறது!!

மூன்றாம் வகுப்பில்

தோழி ஒருத்தி

கன்னத்தில் அறைந்தது

நேற்று

அவளிடம்

சாட்டிங் செய்கையில்

வலித்தது!!

கவலை என்பது தெரியாமல்

காலம் நேரம் அறியாமல்

கையில் கிரிக்கெட் மட்டையுடனும்

கிட்டிப் புல்லுடனும்

திரிந்த நாட்கள்

புது மலராய்-இன்னும்

புத்திக்குள் மனகிறது!!

ஒன்பதாம் வீட்டின்

பெரிய நெற்றி கிழவியும்

எங்களை கடக்கையில்

ஓரக் கண்ணால் பார்த்த

அந்த

கோல்டா பொண்ணும்

இன்னும்

என் நினைவு வெளிகளில்!!

பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும்

சிறகுகள் முளைத்த பறவையாய்

கனவுகளோடு

கல்லூரிக்குள் நுழைந்ததும்!

அங்கே சொர்க்கம் இல்லாத போதும்

சுதந்திரமாக இருந்த நொடிகளும்

இன்னும் பசுமையாய்

என் நெஞ்சுக்குள்!!

சீருடை அணிந்த தேவதைகளில்

ஒருத்தியிடம் மட்டும் மனது லயித்ததும்!!!!

அவளுக்காய் கவிதை வடித்த

காதல் நொடிகளும்!!

அவளிடம்-என்

அன்பை சொல்லமுடியாமல்

தவித்த நொடிகளும்!!

குறிப்பாய்-

இன்னும்

தவிக்கின்ற நொடிகளும்!!

இப்படி

பலதரப்பட்ட

நொடிகளையும்

முகங்களையும்

தனிமையில் இருக்கையில்

நினைத்து பார்க்கிறேன்

என் மனம்

தனிமை துயரை விடுத்து

மழலை குழந்தையாய்

சிரிகிறது!!

கண்களில் கண்ணீருடன்!!

Saturday, May 8, 2010

கடவுளை விடவும்!!

காதல்
விபத்து தான்!
இந்த
விபத்தில் மட்டுமே
இருப்பவை அழகாகும்!
இழப்பவை வரவாகும்!

இமைகள் அறியாமல்
ஊடுவும் கனவை போல
இதயமும் அறியாமல்
காதல் பிறந்திடும்!

காற்றின் சிறகினை
கடன் வாங்கி
இரு
இளமை இதயங்கள்
மேகம் உரசிடும்!

இயேசு மட்டுமா?
காதலும் கூட
ஓர் அப்பத்தை வைத்தே
இரு உலகத்தின்
பசியை போக்கிடும்!!

மனிதன் கொண்ட
பாவங்களை
தன்
நிழலாலே நீக்கிடும்!

ஒற்றை புன்னகையில்
உயிரையே பறித்திடும்!
ஒரு பூவிலே-இரு
இதயம் இணைத்திடும்!

கடவுளிடம் கோரிக்கை
வைக்காமல்
காதலர்கள்
காதலிடம் கோரிக்கை
வைக்கும் நிலை
காதலிலே வாய்த்திடும்!

மார்கழி காலையில்
மலர்ந்திடும் பூக்களின்
பனித்துளி இரசிக்கும்
பக்குவம்
காதலில் மட்டுமே
கைவர சாத்தியம்!!

வரங்கள் கொடுக்கும்
கடவுளை விடவும்!
வரமாய் கிடைக்கும்
மெய்
காதலே சத்தியம்!!