Sunday, July 18, 2010

பதில் வேண்டி!!

மின்னல்கள் அடுக்கி வைத்து
மின்மினி பதியம் போட்டு
மின்னிடும் ஆசை பெண்ணே-உன்
புன்னகை என்ன விலை?

சிந்திடும் வேர்வைத் துளி
தந்திடும் காதல் கனா
வந்திடும் இதழ் வார்த்தைகள்-என்
வண்ணமே என்ன விலை?

பார்க்கையில் மென் காற்று
பக்கத்தில் சர்க்கரை ஊற்று
பஞ்சத்தை பார்த்திடா மேனி-உன்
பருவங்கள் என்ன விலை?

நகர்ந்திடும் சோலை மலர்கள்
நழுங்கிடும் எந்தன் கண்கள்
செழித்திடும் உந்தன் அழகு-என்
செல்லமே என்ன விலை?

வரமாக வந்த நிலா
தரணியில் செல்லும் உலா
சிரபுஞ்சி ஈரம் சிந்தும்-உன்
சிரிபொலி என்ன விலை?

சந்தங்கள் தமிழ் மணக்கும்
சொந்தமாய் நீ வந்தால்-அதிலும்
முந்திடும் உன் நினைவு-என்
முல்லையே என்ன விலை?

சாய்ந்திடும் என் நெஞ்சம்
பாய்ந்திடும் உன் பக்கம்
என்னையே விலையாக தருகிறேன்-உன்
இதயமோ என்ன நிலை?

செய்துவிடு!!இல்லையேல்!!

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!

செல்லாத கனவுகளில்-உன்னிடம்
சொல்லாத காதல் அலை
பொல்லாத பிரிவிற்கு-என்னை
கல்லாய் நீ செய்துவிடு!!

சுற்றதா பூஉலகே-உன்னில்
பற்றாக நானுள்ளேன்-என்னில்
வற்றாத உன் நினைவை-மட்டும்
முற்றாமல் நீ பார்த்துவிடு!!

இல்லையேல்...

கோளற்ற பால்வீதி-ஒரு
நாளற்ற நாட்காட்டி-பிடி
நூலற்ற பட்டம் போல்-இனி
நீயற்ற நானாவேன்!!

கண்ணுக்குள் கண்ணாக-என்னையுன்
எண்ணத்துள் வைக்காமல்-மின்னும்
பொண்ணுக்குள் வைத்தாலும்-நான்
மண்ணுக்குள் புதைந்த சருகாவேன்!!

நிறைந்த நெஞ்சத்தில்-காதல்
நுரைந்து பொங்கி-நீ
விரைந்து வாராமல் போனாலோ-காற்றிலே
கரைந்த கற்பூரம் போலாவேன்!!

சத்தான காதலதை-நான்
முத்தாக சுமக்கின்றேன்-பரிசு
பித்தாக்கும் பிரிவென்றால்-நான்
செத்தாளைப் போலாவேன்!!

ஆதலால்..

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!