Monday, August 2, 2010

அதிசய பெண்ணோ!!

மல்லிகை பூங்கிடங்கோ?-நீ
மன்மத தேன்விருந்தோ
நிலத்தில் நடக்கையில்
நிழலும் சிரிக்க
பெண்ணே நீதான்
பிரம்மனின் அற்புதமோ?

சிரித்திடும் பால்நிலவோ?-நீ
சிலைகளில் புதுவரவோ?
இமைகள் கொண்டே
இதழின் மொழிகள்
பேசும் நீதான்
பேரழகு ஓவியமோ??

நகங்கள் விண்மீனோ?-நீ
நடந்திடும் பெண்பூவோ?
உடைகள் அணியும்
உன் உடல்
அலையின் நுரையில்
அடித்து வடித்தோ??

தேனினத்தின் சன்னதியோ?-நீ
தேவதைகளின் சந்ததியோ?
நூலாடை மறைக்கும்
நூதன பாகங்கள்
பேரேட்டில் சொல்லாத
பெண்ணினத்தின் சங்கதியோ?

வானத்தின் மேகமோ?-நீ
வசந்தத்தின் ராகமோ?
சோகங்கள் எதையும்
சொல்லாத உன்னிதயம்
தடைகள் வந்தாலும்
தளராத செந்தமிழோ?

நனைந்த புதுமலரோ?-நீ
நடமாடும் பூந்தென்றலோ?
நந்தவனப் புற்களில்
நடைபயிலும் பாதங்கள்
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்களோ?

ஜொலித்திடும் அங்கமே-நீ
ஐந்தடி தங்கமே
கண்களால் கண்டேன்
கவிதையில் சொன்னேன்
"அன்பே நீதான்
அழகுகளில் உச்சமே!"

நாக்கை அறுத்தெறிவோம்!!

பூங்காவில் புயலை போல
மனித மனங்களில்
மதங்கள் வீசியது!!
புயல் போன பின்னாலே
நிமிரும் பூங்கொடிகள் கொஞ்சம்!!
உயிர் போன பின்னாலும்
மாறவில்லை
மனித நெஞ்சம்!!

உயிர் காக்கும் கடவுள்களா
உயிர் போக காரணங்கள்?
கடவுள் வரும் பாதைக்கு
மனித எலும்புகளா தோரணங்கள்??

பூஜைக்கு
பூப்பறித்த கைகளில்-இன்று
ஆயுதம்
அறுவடை செய்கிறார்கள்!
அன்பை போதித்த கடவுள்கள் எல்லாம்
அமைதியாய் ஏனோ இருக்கிறார்கள்!!

எல்லோர் கண்ணீரும் கரிக்கும்தான்
எல்லோர் ரத்தமும் சிகப்பேதான்
உடைகள் எல்லாம் தொலைத்தோமானால்
நிர்வாணம் என்பதும் ஒன்றேதான்!!

வெடித்து சிதறும் உடல்களில்
ஆணும் பெண்ணுமே உண்டு
ஆறடி குழியில் புதைந்தபின்
இந்து முஸ்லிம் ஏது?

கடவுள் பேரில் போர்களேன்றால்
மனிதன் வாழ்வது எப்படியோ?
மனிதன் இங்கே இல்லையென்றால்
கடவுள் வாழ்வதும் எப்படியோ??

முருகனே பெரியோன் என்றோ
அல்லாவே சிறந்தவன் என்றோ
கிறிஸ்துவே உயர்ந்தோன் என்றோ
எவர் சொன்னாலும் கூப்பிடுங்கள்
அவர்கள் நாக்கை நாமும் அறுத்தெறிவோம்!!
மதங்கள் இல்லா
மனித சமூகத்தை
ஒன்றாய் நாமும் அமைதிடுவோம்!!

Sunday, July 18, 2010

பதில் வேண்டி!!

மின்னல்கள் அடுக்கி வைத்து
மின்மினி பதியம் போட்டு
மின்னிடும் ஆசை பெண்ணே-உன்
புன்னகை என்ன விலை?

சிந்திடும் வேர்வைத் துளி
தந்திடும் காதல் கனா
வந்திடும் இதழ் வார்த்தைகள்-என்
வண்ணமே என்ன விலை?

பார்க்கையில் மென் காற்று
பக்கத்தில் சர்க்கரை ஊற்று
பஞ்சத்தை பார்த்திடா மேனி-உன்
பருவங்கள் என்ன விலை?

நகர்ந்திடும் சோலை மலர்கள்
நழுங்கிடும் எந்தன் கண்கள்
செழித்திடும் உந்தன் அழகு-என்
செல்லமே என்ன விலை?

வரமாக வந்த நிலா
தரணியில் செல்லும் உலா
சிரபுஞ்சி ஈரம் சிந்தும்-உன்
சிரிபொலி என்ன விலை?

சந்தங்கள் தமிழ் மணக்கும்
சொந்தமாய் நீ வந்தால்-அதிலும்
முந்திடும் உன் நினைவு-என்
முல்லையே என்ன விலை?

சாய்ந்திடும் என் நெஞ்சம்
பாய்ந்திடும் உன் பக்கம்
என்னையே விலையாக தருகிறேன்-உன்
இதயமோ என்ன நிலை?

செய்துவிடு!!இல்லையேல்!!

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!

செல்லாத கனவுகளில்-உன்னிடம்
சொல்லாத காதல் அலை
பொல்லாத பிரிவிற்கு-என்னை
கல்லாய் நீ செய்துவிடு!!

சுற்றதா பூஉலகே-உன்னில்
பற்றாக நானுள்ளேன்-என்னில்
வற்றாத உன் நினைவை-மட்டும்
முற்றாமல் நீ பார்த்துவிடு!!

இல்லையேல்...

கோளற்ற பால்வீதி-ஒரு
நாளற்ற நாட்காட்டி-பிடி
நூலற்ற பட்டம் போல்-இனி
நீயற்ற நானாவேன்!!

கண்ணுக்குள் கண்ணாக-என்னையுன்
எண்ணத்துள் வைக்காமல்-மின்னும்
பொண்ணுக்குள் வைத்தாலும்-நான்
மண்ணுக்குள் புதைந்த சருகாவேன்!!

நிறைந்த நெஞ்சத்தில்-காதல்
நுரைந்து பொங்கி-நீ
விரைந்து வாராமல் போனாலோ-காற்றிலே
கரைந்த கற்பூரம் போலாவேன்!!

சத்தான காதலதை-நான்
முத்தாக சுமக்கின்றேன்-பரிசு
பித்தாக்கும் பிரிவென்றால்-நான்
செத்தாளைப் போலாவேன்!!

ஆதலால்..

மல்லிப் பூச்சுடும் தாமரையே
சொல்லி மாளாது உன்னழகே
எள்ளி நகைத்தாடும் இப்பிரிவை
கொள்ளித் தீமூட்டி கொன்றுவிடு!!

Wednesday, June 30, 2010

உன் நினைவில்!

புலன் ஐந்தை

புதுப்பிக்கும்

புல்வெளியில் படுத்திருந்தேன்!!

பூஞ்சாரல் மேகமில்லா

புதுவானம் பார்த்திருந்தேன்!!

பூப்போல உன்முகம்-என்

நினைவெளியில் வந்தவுடன்!

ஓர்வண்ண வானத்தில் -நான்

ஏழ் வண்ணம் பார்த்திருந்தேன்!!

பல்லவ சிற்பங்கள்-என்னை

பகடியாய் பார்த்திருக்க

பாறையின் இடுக்கிலும்-உன்

பால்முகம் ரசித்திருந்தேன்!!

காலில்லா காற்றுக்கு

சலங்கைகள் கட்டிவிட்டு - அதன்

ஜதி சொல்லும் பாதத்தில்-உன்

சுவடுகள் பார்த்திருந்தேன்!!

திசை எட்டும் உன் பிம்பம்

தீபம் போல் ஒளிர்ந்திருக்க!!

என் கண்ணீரின் தடத்தை

காதலால் அடைத்திருந்தேன்!!

எங்கேயோ ராகங்கள்

ஒலியினில் சேர்ந்திருக்க

பெயரில்லா ரகத்திற்கு-நான்

வார்த்தைகள் அடுக்கிவைத்தேன்!!

கடல் கொண்ட அக்கரையை

காவலுக்கு வைத்துவிட்டு!

உன் பிரிவால் நான் மட்டும்

இக்கரையில் வாடுகிறேன்!!

எத்தனையோ நாளாகியும்

எட்டாத நிலா பிடிக்க

ஆர்பரிக்கும் அலைகளுக்கு-நான்

ஆதரவாய் நிற்கின்றேன்!!

இயற்கையிடம் பேசுவதாய்

இதயத்தை சொல்லிவிட்டு

எழுத்துக்கள் கோர்துவைத்து-உன்னை

எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!!

======================================================

வங்காள விரிகுடாவின் வயிட்ட்றுப் பகுதியான மாமல்லபுரத்து கடற்கரையில் அமர்ந்து எழுதியது.

======================================================

பழைய நொடிகளும் முகங்களும்

கடந்த நாட்களை

திரும்பிப் பார்க்கிறேன்

என்

ஞாபக குளமெங்கிலும்

நீரலையாய்

நினைவலைகள்!!

மார்கழிப் பனியில்

அம்மா கோலம் போடுகையில்

காதை மூடியபடி-வாசலில்

அமர்ந்திருந்ததும்!!

அம்மிக் கல்லில்

சட்னி

அறிக்கையில்

சிதறிய தேங்காய் சில்லையும்

விலகிய பொட்டுக் கடலையும்

வாயில் போட்டதும்!!

காலாண்டு தேர்வில்

குறைந்த மார்கிற்காய்

அப்பா அடித்ததும்

சற்று நேரத்தில்

அழுகை நிற்க

தேங்காய் பண்

சாப்பிட்டதும்!!

இன்னும்

என் ஞாபக வங்கியில்

இருப்பாய்

இருக்கிறது!!

மூன்றாம் வகுப்பில்

தோழி ஒருத்தி

கன்னத்தில் அறைந்தது

நேற்று

அவளிடம்

சாட்டிங் செய்கையில்

வலித்தது!!

கவலை என்பது தெரியாமல்

காலம் நேரம் அறியாமல்

கையில் கிரிக்கெட் மட்டையுடனும்

கிட்டிப் புல்லுடனும்

திரிந்த நாட்கள்

புது மலராய்-இன்னும்

புத்திக்குள் மனகிறது!!

ஒன்பதாம் வீட்டின்

பெரிய நெற்றி கிழவியும்

எங்களை கடக்கையில்

ஓரக் கண்ணால் பார்த்த

அந்த

கோல்டா பொண்ணும்

இன்னும்

என் நினைவு வெளிகளில்!!

பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும்

சிறகுகள் முளைத்த பறவையாய்

கனவுகளோடு

கல்லூரிக்குள் நுழைந்ததும்!

அங்கே சொர்க்கம் இல்லாத போதும்

சுதந்திரமாக இருந்த நொடிகளும்

இன்னும் பசுமையாய்

என் நெஞ்சுக்குள்!!

சீருடை அணிந்த தேவதைகளில்

ஒருத்தியிடம் மட்டும் மனது லயித்ததும்!!!!

அவளுக்காய் கவிதை வடித்த

காதல் நொடிகளும்!!

அவளிடம்-என்

அன்பை சொல்லமுடியாமல்

தவித்த நொடிகளும்!!

குறிப்பாய்-

இன்னும்

தவிக்கின்ற நொடிகளும்!!

இப்படி

பலதரப்பட்ட

நொடிகளையும்

முகங்களையும்

தனிமையில் இருக்கையில்

நினைத்து பார்க்கிறேன்

என் மனம்

தனிமை துயரை விடுத்து

மழலை குழந்தையாய்

சிரிகிறது!!

கண்களில் கண்ணீருடன்!!

Saturday, May 8, 2010

கடவுளை விடவும்!!

காதல்
விபத்து தான்!
இந்த
விபத்தில் மட்டுமே
இருப்பவை அழகாகும்!
இழப்பவை வரவாகும்!

இமைகள் அறியாமல்
ஊடுவும் கனவை போல
இதயமும் அறியாமல்
காதல் பிறந்திடும்!

காற்றின் சிறகினை
கடன் வாங்கி
இரு
இளமை இதயங்கள்
மேகம் உரசிடும்!

இயேசு மட்டுமா?
காதலும் கூட
ஓர் அப்பத்தை வைத்தே
இரு உலகத்தின்
பசியை போக்கிடும்!!

மனிதன் கொண்ட
பாவங்களை
தன்
நிழலாலே நீக்கிடும்!

ஒற்றை புன்னகையில்
உயிரையே பறித்திடும்!
ஒரு பூவிலே-இரு
இதயம் இணைத்திடும்!

கடவுளிடம் கோரிக்கை
வைக்காமல்
காதலர்கள்
காதலிடம் கோரிக்கை
வைக்கும் நிலை
காதலிலே வாய்த்திடும்!

மார்கழி காலையில்
மலர்ந்திடும் பூக்களின்
பனித்துளி இரசிக்கும்
பக்குவம்
காதலில் மட்டுமே
கைவர சாத்தியம்!!

வரங்கள் கொடுக்கும்
கடவுளை விடவும்!
வரமாய் கிடைக்கும்
மெய்
காதலே சத்தியம்!!

புத்தகம்!!

புத்தகம்!
எழுத்துக்கள் சுமந்து வரும்
வெள்ளைத் தாள்!!
மனிதனுக்கு
அறிவை கொடுத்திட
தாளில் வந்த
ஞானப் பால்!!

புத்தகம்!
கடந்ததனைத்தையும்
கண் முன் வைக்கும்!!
நடப்பதை எல்லாம்
நமக்கென விளிக்கும்!!
நாளை நடப்பதை கூட
நயமாய் ஒலிக்கும்!!
புகைப்படம் கூட-எடுக்கும்
அந்த
ஒற்றை நொடியை மட்டுமே பிரதிபலிக்கும்!!

புத்தகம்!
வாசிக்கும் மனிதனை
வசமாக்கும்!!-இது
பாழ்பட்ட மனதினை
பண்பாக்கும்!!
ஆழ்மனதின்
அறியாமை இருளை
அதட்டி விரட்டி
பகலாக்கும்!!

மண்ணும் பொன்னும் பெண்ணும் தானா
மனிதனின் தேவை?
புத்தியை வளர்த்திட புத்தகத் தேடலே
மனித மனதின் முதன்மை தேவை!!

நிலமாய் வாங்கி இருந்தால்-பத்திரத்தால்
நிறைந்திருக்கும் என் அலமாரி!!
பொன்னிலே மதிப்பென்றால்-என்
புத்தி
பூஜ்யதிலே நின்றிருக்கும்!!
பெண்ணால்
காமத்தின் எல்லைக்குள்
கால் வைத்திருந்தால்
கால்மணியில் அந்த சுகம்
களிப்பின்றி போயிருக்கும்!!

புத்தகத்தின் மீது கொண்ட
போதையினால்-என் வாழ்க்கை
புது திசையில் பயணிக்கின்றது!!
புத்தகத்தின் துணையால் தான்
என்
அறிவின் எல்லை
அரையடியேனும் வளர்ந்திருக்கிறது!!

நான் காணாத கம்பன்!
நான் காணாத வள்ளுவன்!
நான் காணாத இளங்கோ!
நான் காணாத பாரதி!
நான் காணாத பெரியார்!
நான் காணாத அண்ணா!
நான் காணாத காமராஜர்!
நான் காணாத காந்தி!
நான் காணாத இந்திரா!
நான் காணாத ராஜீவ்!
நான் காந்த மார்க்ஸ்!
நான் காணாத லெனின்!
நான் காணாத காஸ்ட்ரோ!
நான் காணாத சேகுவேரா!
நான் காணாத மாவோ!
நான் காந்த மார்டின்லுதர்!
நான் காந்த நெல்சன் மண்டேலா!
நான் காந்த அன்னை தெரசா!
நான் காணாத இன்னும் பலரையும்
எனக்கு
புத்தகமே அறிமுகம் செய்தது!
அதுதான்-இந்த உலகிற்கும்
எனக்குமான
இடைவெளியை குறைத்தது!

வாசிக்கும் பழக்கத்தை
வசதியாக மறக்கின்ற சமுகமே!
வெறும் காகிதமென்று சொல்லி
அறிவுப் புதையலை வெறுக்காதிர்!

அடுத்தவர் அறிவுதான் புத்தகம்
அதிலும் நமக்கு பயனிருக்கு!!
எப்படி என்றால்
உந்தன் அறிவில் தான்-அடுத்த
தலைமுறையின் விதை இருக்கு!!






Wednesday, April 14, 2010

எனக்கானவள்!!

குளிர்கால மலர் போல பதமானவள்-இரு
குழை ரெண்டை சுமக்கின்ற கொடியானவள்
இடைமீது உடை கொண்ட பனியானவள்-சிறு
இதழாலே எனை கொல்லும் வலுவானவள்

சந்தங்கள் அடுக்கி வைத்த கவியானவள்-என்
சந்தோஷம் திறந்து வைக்கும் வழியானவள்
கருநீலக் கண் கொண்ட கலையானவள்-என்
கண்ணீரை இனிப்பாக்கும் சுவையானவள்

செந்தாழம் மலர் வீசும் மனமானவள்-காதல்
சொல்லாத என் நெஞ்சிற்கு மணமானவள்
பொல்லாத தனிமையில் என் துனையானவள்-நான்
பெய்கின்ற கவிகளுக்கு அவளே கருவானவள்

என் எரிகின்ற கனவுகளில் நெருப்பானவள்-தினம்
இரவில் தீர்கின்ற எனதுயிருக்கு பொறுப்பானவள்
விண்மீன்கள் விலை பேசும் ஒளியானவள்-நினைவில்
விலகாமல் எனை தொடரும் நிழலானவள்

சிறகில்லா என் உடலுக்கு சிறகானவள்-இருந்தும்
சிறையில்லா எந்தன் மனதுக்கு சிறையானவள்
கரையில்லா என் வாழ்க்கைக்கு கரையானவள்-நீரில்
கரைத்தாலும் விலகாத நிலவின் கறையானவள்

என் இதழ்களின் செயல்களில் சிரிப்பானவள்-என்
இரு கைகளின் செயல்களில் அனைப்பானவள்
என் எண்ணத்தின் செயல்களில் சொல்லானவள்-துடிக்கும்
என் இதயத்தின் செயல்களில் அன்பானவள்

எல்லாரும் முயன்றும் முடியாத மலையானவள்-அவள்
எனக்காக எனதருகில் உயிர்ச் சிலையானவள்
என்றென்றும் தீராத கடலின் அலையானவள்-நெஞ்சில்
எப்போதும் சுரக்கின்ற காதலில் நிலையானவள்

************************************************************************************

இந்த கவிதையில் உள்ளவள் யாரென்று கேட்காதீர்கள், ஏன்னென்றால்?
பதில் இல்லா கேள்வி பயனற்றது!!

************************************************************************************

காந்திக்கும் எனக்கும்!!!

ஒரு சிரிப்பை மட்டுமே
தந்துவிட்டு
என் இதயத்தை
எடுத்து சென்றவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??

காற்றுக்கு கால் முளைத்த
மாதிரி!
பூவுக்கு வாய் முளைத்த
மாதிரி!
இப்படி எல்லா மாதிரிக்கும்
மாதிரியாய் இருந்தவளே!
நீ
எங்கே இருக்கிறாய்??

உன்னை காணாத நேரத்தில்
உனக்கென
கவிதை செய்யும் என்னிதயம்
நீ
பக்கத்தில் இருக்கையில்
படபடத்த காரணத்தை என் சொல்ல?

பயமா? - உன்னழகை
பார்த்ததால் மயக்கமா?
சொன்னால்-என்னை
வெறுத்திடுவாயோ
என்ற தயக்கமா? என் சொல்ல?

சந்திரன் இருக்கும் வரை
நினைக்கப் படாத
நட்சத்திரத்தை போலவே
நீ
எனதருகில் இருக்கும் வரை
என் நெஞ்சத்தின்
எண்ணங்கள்
எனக்கு புலப்படவில்லை!!

உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!

பூமியும் கூட
ஒரு
சுயநலத்தோடு தான்
சூரியனை
சுற்றி வருகிறது!
என் இதயமோ
என்னையும் மறந்தல்லவா
உன்னையே நினைக்கிறது!!

உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!

கண் திறக்கும் போதெல்லாம்
உன்னையே தேடுகிறது
கண்கள்!!
வைக்கும் அடியெல்லாம்
உன்னையே நோக்கி வைக்கிறது
கால்கள்!!

உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இதன் அர்த்தத்தை
என்னவென்று!

பொதுவுடைமை கற்றுத்தந்த
கார்ல் மார்க்ஸ் ஜென்னியிடம்
கொண்ட காதலையும்!!
உலகத்தையே ஆள நினைத்த
ஹிட்லர் பிரௌனிடம்
கொண்ட காதலையும்!!

உன்னை
பிரிந்ததும் தானடி
புரிந்து கொண்டேன்
இந்த காதலின்
அர்த்தத்தை
என்னவென்று!

சுதந்திரத்தை நேசித்த
மோகன் தாஸ்
கரம்சந்தை போல
நானும் உன்னை நேசித்தேனடி! - ஆனால்
இன்று - நான் விரும்பிய
நீயோ எனக்கு கனவாகி
போனாய்!
காந்திக்கு சுதந்திரம்
ஆனதை போலவே!!



Wednesday, March 24, 2010

காதல் கட்டளை!!

காதலை எனக்கும்
என்னை காதலுக்கும்
அறிமுகப் படுத்தியவளே!!

முடி கோதும்
உன் விரலசைவில்
என்
இதயத்தின்
ஆணிவேரை அசைத்தவளே!!

தன் இமைக்கைகள் நீட்டியே
என்
விழி உன்னை தேடுதே!!
உன்
ஒரு பார்வை தீண்டியே
என்
உயிர் இங்கே வாழுதே!!

கடல் மறைக்காத
மலை உச்சியே
தீவுகள் ஆவது போல்
என்
மனம் மறைக்காத
உன் நினைவுகளே
காதலாய் ஆனதடி!!
காதலால்
கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போனதடி!!

சிந்திக்கும் நேரத்தில்
சிந்திவிழும் வார்த்தைகள்
உன்னை
சந்திக்கும் நேரத்தில்
மௌனமாய் ஆவதுஏன்??
எதிர்பாராமல்
விழி நான்கும் பார்க்கையிலே-நீ
விலகித்தான் போவது ஏன்?

புளிப்பும் துவர்ப்பும்
கர்பவதி நேசிப்பது!
உன்
சிரிப்பும் காதலும் தான்- இந்த
காதலன் நான் யாசிப்பது!!

தீந்தமிழ் சொல்லாலே
திறவாத இதழ் திறந்து
உம்மென்று சொல்லிவிடு
ஒரு வார்த்தை!! - அந்த
வார்த்தையின் முற்றத்தில் - உருவாகும்
நமக்கான புது வாழ்க்கை!!

உன்
புருவங்கள் இணைக்கும்
கம்பிக் குங்குமத்தையும்!
நம் நிழல்
உருவங்கள் இணைக்கும்
அந்திவெயில் மாலையையும்!
நான்
கவிதையில் பதிகிறேன் கொஞ்சம்!!
கொஞ்சமே என்றாலும்
கொள்ளியிலும் மறக்காது என் நெஞ்சம்!!

உலகக் காதல்
நமக்கே நமக்கென்று
மிச்சமாய் உள்ளதடி!!
மிச்சத்தின் துணைக் கொண்டு
காதலின்
உச்சத்தை தொட்டிடுவோம்!!
காற்றுக்கும் கடலுக்கும்
நம் பெயரை பாடிட
கட்டளைகள் இட்டுடுவோம்!!




உன் அழகின் வீரியம்!!

மின்மினி கண்களில்
மின்னலென சிரிக்கிறாய்!
இலைவடிவ இதயத்தை-ஏன்
உளியென இடிக்கிறாய்?
துப்பட்டா முனைகளில்
என்னுலகத்தை முடிகிறாய்!
இமைத்திடும் நேரத்தில்
என்னுள்ளே காதலை செலுத்தினாய்!!
அணுக்களால் ஆனது உடம்பென்று
விஞ்ஞானம் சொன்னது!
அது உன்னிடம் மட்டுமே- தன்
தோல்வியை ஏற்றது!!
பனிமலர் இதழெடுத்து
பாலொளி நிலா குழைத்து
பெண்ணென படைத்ததை
அணுக்களால் ஆனதேன்றா
அறியாமல் சொல்வது?
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்கள்
நிலத்தினில் படலாமா?
பூக்களின் இதழ் தெளித்து
நீ நடந்திட
பாயென தரலாமா?
அதரத்தின் ஓரத்தில்
அதுஎன்ன சிரிப்போ?
ஆண்டனியை வீழ்த்திட்ட
கிளியோபாட்ரா நினைப்போ?
திமிரிடும் அழகினை-அன்பே
திட்டி வை!!
என்னையே உடைக்கிறது-கொஞ்சமேனும்
குட்டி வை!!



Wednesday, March 10, 2010

கொட்டு முரசே!!

திசைகள் எட்டும் ஒளிரட்டும் - வாழ்வின்
தீமைகள் எல்லாம் பொசுங்கட்டும்!!
எங்களுக்கான
சட்டங்கள் பிறந்ததென்று
சத்தமாய் கொட்டு முரசே!!

எண்ணெய் பிசுக்கான
எங்கள் கைகள்
வானத்தின் நீலத்தில்
தவழட்டும்!!
உயர்ந்திட்ட கைகள்
தங்கள் இருப்பை - இந்த
உலகத்தில் பதிக்கட்டும்!!
கொட்டு முரசே!!

கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போகட்டும்!!
கட்டுக்குள் இருந்த
காற்று - இன்று
தன்
விலங்கினை விலக்கட்டும்
கொட்டு முரசே!!

பாண்டி ஆட்டத்தில்
கோடுகள் தாண்டிய
பாதங்கள்
பொருளாதார கட்டுக்குள்
பொருத்தது போதுமென்று
கொட்டு முரசே!!

மதமென்னும் பெயராலே
எங்கள் வானத்தை
மறைத்த
சடங்கென்ற கூரைகள்
சட்டென்று சரியட்டும்
சந்தோசமாய் கொட்டு முரசே!!

மெல்லினத்தின் போராட்டம்
ஆதிக்க பிசாசின்
இரும்புத் திரையை
இல்லாமல் செய்ததென்று
எல்லாருக்கும் கொட்டு முரசே!!

அடுக்களை பறவையின்
அறியாமை போக்கிட!!
மக்களவை சூட்சமம்
மகளிரும் புரிந்திட!!
மசோதா நிறைவேறியதை
மத்தளமாய் கொட்டு முரசே!!

வீட்டுக்குள்
பூ கட்டிய இனங்களுக்கும்
இன்று
பூமாலை சூட்டிட
புதுநாளோன்று
பூத்ததேன்று கொட்டு முரசே!!

நுற்றாண்டு பழிச்சொல்
நொடியினில் தீர்ந்ததை!!
ஜடமென்ற புராணங்களுக்கு
சவுக்கடி கிடைத்ததை
செவிப்பறையில் கொட்டு முரசே!!

தடையில்லா எங்கள் கால்கள்
தடமாறி செல்லுமென்ற
பாமர பயங்களை
புறந்தள்ளி புறப்பட்டோமென்று - எங்கள்
புகழ்பாட கொட்டு முரசே!!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியதை கொண்டாடும் மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்......

விடிந்தது இரவு!!!!

பெண்!!
நம்
வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும்
பூரணமாக்கும் வரம்!!!
ஒவ்வொரு நிகழ்வுகளையும்
சாத்தியமாக்கும் பலம்!!

அடுக்களை தேசத்தில்
அடிமையாய் இருந்தவள்!
இன்று
சுதந்திர வானத்தில்
சிறகுகள் விரிகிறாள்!

உயிர்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை மட்டுமல்ல தாங்களேன்று
உலகிற்கு உணர்த்திவிட்டாள்!!
கல்வியின் துணைகொண்டு
ஆணாதிக்க சமூகத்தின்
நூற்றாண்டு இருளை
நொடியினில் விரட்டிவிட்டாள்!!

கால் பதித்த துறையிலெல்லாம்
விஸ்வரூபம் காட்டிவிட்டாள்!!
ஆணுக்கு பெண் சமம் என்பதை
பெண்ணுக்கே ஆண் சமமென்று ஆக்கிவிட்டாள்!!

சீதை நளாயினி கண்ணகி என்னும்
முதுமக்கள் தாழிகளை பரணில் ஏற்றிவிட்டாள்!!
அவ்விடங்களில்
மங்கம்மாள் வேலுநாசியார் நாகம்மை
மணியம்மை என்னும் வீரத் திலகங்களை
மாற்றிவிட்டாள்!!

சுய சிந்தனையற்றவள் என்று
புராணங்கள் செப்பியதை - தன்
அறிவாலே பொசுக்கி விட்டாள்!!
தம் பாதங்கள் பயணிக்க
பாதையினை விசாலமாக்கி கொண்டாள்!!

பூவோடும் நதியோடும்
ஒப்பிட்டு வந்தவர்களை
புயலுக்கும் பெண் பெயரை
வைக்கும் நிலை செய்துவிட்டாள்!!
மெல்லினத்தின் அடையாளம் உடலுக்கே
உணர்வுக்கு இல்லையென்று ஊருக்கு சொல்லிவிட்டாள்!!

நூற்றில் அறுபது சதம்
இவ்வாறு இருக்கையில்
நாற்பது சதம்
எதிர்மறையாய் இருக்கிறதே!!!!!!!!!

வல்லரசாகும் வேகத்தில்
நடைப்போடும் பாரதமே
பெண்ணினத்தை உயர்த்தாமல்
நீ வல்லரசாகும் சாத்தியமுண்டோ?

33%
கேட்பதே குறைவுதான்
கேட்பதையெனும் கொடுத்துவிடு!!
இல்லையேல் - உன்
வல்லரசு கனவினை
வழித்து எறிந்துவிடு!!

உலகத்து ஆண்களே!!!
பெண்ணின் வாழ்க்கைக்கு
வேலி கட்டி வைத்தவர்களே!!
ஆதிக்க எண்ணத்தை
அடியோடு எரியுங்கள்!!
மோகத்தில் மட்டுமல்ல - நம்
சோகத்திலும் பங்கேற்பவளை
சமமாக மதியுங்கள்!!

உலகத்து பெண்களே!!
பாரதிக்கும் பெரியாருக்கும்
பலித்து விட்ட கனவுகளே!!!
ஒவ்வொரு பூவுக்குள்ளும்
தேன்த்துளி மாதிரி
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
நெருப்பொன்று உள்ளது!!
அதை
திரியில் பொருத்துங்கள்
தீபமாய் ஒளிரட்டும்!!
அகிலத்திற்கு - பெண்கள்
அடிமையில்லை என்பதை
கம்பீரமாய் மொழியட்டும்!!


சென்ற வருட மகளீர் தினத்தில் எழுதியது

Tuesday, March 9, 2010

அம்மா

தண்ணீர் குடம் உடைத்து - நீ
தரையில் பிறந்த நாள்முதல்
தன்னை நினைக்க மறந்தவள்!

உதடு பிரித்து - நீ
உணவு கேட்கும் முன்
உதிரம் பிரித்து பாலாய் தந்தவள்!

கால்கள் நிமிர்த்தி - நீ
காலம் வெல்ல தொடங்கியும்
கண்ணின் மணியாய் உன்னைக் காப்பாள்!

முட்டிய கண்ணீர் - உன்
முகம் கடக்கும் முன்
முந்தானை சூட்டில் உலரச் செய்பவள்!

நோயில் படுத்தாலும் - நீ
நூறாண்டு வாழ சாமிக்கு
நேர்ததிக் கடன் எடுக்கும் ஜீவனவள்!

மணக்கும் சமையலில் - புளி
மஞ்சள் மிளகாய் உப்போடு
மனதின் பாசத்தையும் சேர்த்தே கலப்பவள்!

ஏதோ குழந்தை - அது
எங்கோ அழுதாலும் தான்
இதயத்தில் உன்னை உருவகம் செய்பவள்!

மகிழ்ச்சியோ வலியோ - அவள்
மடி சாய்கையில் தன்
மெல்லிய விரல்களால் தலை கோதுபவள்!

விரல்களின் கோதலில் - நம்
விழிகளின் வழியே மனதின்
விலகாத துயரத்தையும் விரட்டி அடிப்பவள்!

கனிந்த நெஞ்சமும் - இரு
கண்களிலும் பாசத்தை சுமப்வளை
கடவுள் என்று தவராய் சொல்வதோ?!

உலகை படைத்தவனையும் - இந்த
உலகை அழிப்பாவனையும் விடவும்
உயர்ந்தவள் என்றால் தவறேதும் உள்ளதோ?!!!!

Saturday, February 27, 2010

இதயத்தின் மௌனம்

மலரோடு பிறந்தவளே - என்
மனதோடு கலந்தவளே
விலகியே இருந்தாலும் - என்
விழிகளில் கரைந்தவளே

மருதாணிக் கைகளில் - என்னை
மடித்துக் கொண்டாய்
வெறும் சிரிப்பாலே - குளிர்
வெந்நீரில் தள்ளிவிட்டாய்

படியாத என்னை - ஒரு
பார்வையிலே படியவைத்தாய்
விடியாத இரவுகளில் - என்
விழிகளை விழிக்கவைத்தாய்

இளமைக்கு பரிசாக - நீ
எனக்கு கிடைத்துவிட்டாய்
வளமையான உன்னழகில் - என்னை
வசதியாய் மடித்துவிட்டாய்

சட்டென்று நெஞ்சத்தில் - நீதான்
சம்மனம் போட்டுவிட்டாய்
பட்டென்று பார்த்ததில் - என்னை
பதியாய் உருகவைத்தாய்

சினமான கவிஞன் - என்னை
சிப்பிக்குள் சிறைவைத்தாய்
கனமான கனவுகளை - எந்தன்
கண்களுக்குள் விதைத்துவிட்டாய்

உதயத்தை காண்கையில் - உன்னை
உள்ளத்தில் புள்ளிவைப்பேன்
இதயத்தின் எண்ணத்தை - உன்னிடம்
எப்படி சொல்லிவைப்பேன் ?

காதல் கண்ணாடி

காதல் என்னும்
கண்ணாடி கொண்டு
பூமியை பாருங்கள்

வெட்டவெளி நிலமெல்லாம்
வெள்ளை பூக்கள் மலர்ந்திருக்கும்!
உச்சி வெயில் வேளையிலும்
வெண்ணிலா சிரித்திருக்கும்!

கடற்கரை மணல் எங்கும்
ரோஜாப் பூ பாய் விரிக்கும்!
காதலர்கள் விரல்களெல்லாம்
கவிதையால் மொழி வளர்க்கும்!

காதலியின் கழுத்து சங்கிலியில்
அவளது பற்களின் தடமிருக்கும்!
காதலன் அவன் கனவுக்குள்
காதலிக்கு மட்டுமே இடமிருக்கும்!

அணுகுண்டே விழுந்தாலும்
அவர்களுக்கு மட்டும்
ஆரவாரமில்லா இடங்கிடைக்கும்!

தொலைபேசிக் கூட்டுக்குள்ளே
அவர்களது
இதயத்தின் துடிப்பிருக்கும்!

விழிகளுக்கும் மூளைக்கும்
இடைவெளிகள் நீண்டிருக்கும்!
காதலர்களின்
பாதப் பள்ளத்தில் தான்
இந்த
பூமியே சுழன்றிருக்கும்!

பசியும் கவலையும் இவர்களுக்கு
பயந்து எங்கோ ஒளிந்திருக்கும்!
பூங்காவின் எல்லைகள் இன்னும்
இவர்களால் வளர்ந்திருக்கும்!

கறையுள்ள நிலவைப் போல
சில காதலிலே
காமமும் கலந்திருக்கும்!
என்றாலும்
அந்த காமத்தை காதலே
வென்றிருக்கும்!

காதலெனும் மொழியிடம் தான்
உலகக் கவிஞர்களுக்கு
சொற்கள் கிடைக்கும்!
அந்த
காதலனே கவிஞன் என்றால்
காதல் மொழிகளுக்கு
கிளைகள் முளைக்கும்!

காதலர்களின்
இதழ் கடக்கும் சொற்களெல்லாம்
காதலிலே நனைந்திருக்கும்!
சிறு ஊடலெனும் நெருப்பில் தான்
அந்த சொற்களெல்லாம் காய்ந்திருக்கும்!

அறியாத பயமொன்று
மனதுக்குள் மணியடிக்கும்!
என்றாலும் அதையே தான்
இரு இதயம் ரசித்திருக்கும்!

புவி ஈர்ப்பின் துணையாலே
கடலென்றும் கரை தாண்டாதிருக்கும்!
அந்த புவி ஈர்ப்பே
இந்த காதலாலே நிலைத்திருக்கும்!

ஆகையினால்,
காதல் என்னும்
கண்ணாடி கொண்டு - இந்த
பூமியை பாருங்கள்........

உடையட்டும் அன்று

வண்ணம் தீர்ந்த வானவில்
வற்றித் தொலைந்த பெருங்கடல்
தேன் இல்லாத பூக்கள்
தேர் இல்லாத கடவுள்
சுழன்று முடித்த பூமி
சுடுவதை மறந்த சூரியன்
இவைகளை எல்லாம்
உலகம் காணும் நாளில்
உடையட்டும் நம் காதல்!!!!

தமிழ் வணக்கம்

ஆயிரம் பெரியோர்
அவர்தம் திருவாயில்
அழகாய் அமர்ந்து
அகிலம் ஆளும்
தமிழே!

எழுத்தாய் பிறந்து
சொல்லாய் வளர்ந்து
செய்யுளாய் விரிந்து
உரைநடையாய் உயர்ந்து-பின்
எங்கள்
உயிராய் ஆன
தமிழே!

தெய்வங்களை பாடிய பெரியோர்
தேவர்களை ஏற்றிய பெரியோர்
காவியங்கள் இயற்றிய பெரியோர்- பின்னர்
காதலை பாடும் பெரியோர்-இந்த வரிசையில்
என்னையும் எழுத தூண்டிய
தமிழே!

இயலாய்!
இசையாய்!
நாடகமாய்!
நான் கண்ட
முத்தமிழே!

என்
கற்பனை என்னும்
கால்வாயை
கவிதை கடலில்
சங்கமிக்க வைத்த
தமிழே!

உனக்கு
என் கவிதையால்
செய்கிறேன்
தமிழ் வணக்கம்!

என்றென்றும்
உனக்கே
என்
முதல் வணக்கம்!!

Tuesday, February 16, 2010

வருகிறேன்

அன்புடையீர்,

வணக்கம். தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் இந்த உலகத்தில், அதற்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொன்று, கவிதை படிப்பவர்களை விட கவிதை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம். இன்று முதல் அந்த எண்ணிக்கை ஒன்று கூடுகிறது, எனது வருகையால்.

கவிதை செய்யும் பித்தர் களின் கூட்டத்தில் புதிதாய் இணையும் பித்தன் நான், மனிதர்களின் பாவங்களை விரும்பி ஏற்ற ஏசு பிரானை போலவே நானும் இந்த பட்டத்தை விரும்பியே ஏற்கிறேன். அதன் பயனாக வருகின்ற கவிதையை பதிய இந்த வலை பூவை களமாக்கி கொள்கிறேன்.

நான், எனது எண்ணங்களை பதிவதர்க்கு கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்: ஒரு பௌதிக விதியை இலகுவாக விளக்க உதவும கணிதத்தை போலவே எனக்கு கவிதை இருந்ததனால் மட்டுமே.

இது வரை நான் மட்டுமே ரசித்து வந்த எனது கவிதைகளை (நான் மட்டுமாவது ரசித்து வந்தேனே!!) உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தில் தனக்கான இடம் தேடும் ஒரு சிட்டுக்குருவியின் உணர்வோடு.


விரைவில் கவிதைகளுடன் உங்களை சந்திக்க வருகிறேன்!!!

கார்த்திக்