Tuesday, March 9, 2010

அம்மா

தண்ணீர் குடம் உடைத்து - நீ
தரையில் பிறந்த நாள்முதல்
தன்னை நினைக்க மறந்தவள்!

உதடு பிரித்து - நீ
உணவு கேட்கும் முன்
உதிரம் பிரித்து பாலாய் தந்தவள்!

கால்கள் நிமிர்த்தி - நீ
காலம் வெல்ல தொடங்கியும்
கண்ணின் மணியாய் உன்னைக் காப்பாள்!

முட்டிய கண்ணீர் - உன்
முகம் கடக்கும் முன்
முந்தானை சூட்டில் உலரச் செய்பவள்!

நோயில் படுத்தாலும் - நீ
நூறாண்டு வாழ சாமிக்கு
நேர்ததிக் கடன் எடுக்கும் ஜீவனவள்!

மணக்கும் சமையலில் - புளி
மஞ்சள் மிளகாய் உப்போடு
மனதின் பாசத்தையும் சேர்த்தே கலப்பவள்!

ஏதோ குழந்தை - அது
எங்கோ அழுதாலும் தான்
இதயத்தில் உன்னை உருவகம் செய்பவள்!

மகிழ்ச்சியோ வலியோ - அவள்
மடி சாய்கையில் தன்
மெல்லிய விரல்களால் தலை கோதுபவள்!

விரல்களின் கோதலில் - நம்
விழிகளின் வழியே மனதின்
விலகாத துயரத்தையும் விரட்டி அடிப்பவள்!

கனிந்த நெஞ்சமும் - இரு
கண்களிலும் பாசத்தை சுமப்வளை
கடவுள் என்று தவராய் சொல்வதோ?!

உலகை படைத்தவனையும் - இந்த
உலகை அழிப்பாவனையும் விடவும்
உயர்ந்தவள் என்றால் தவறேதும் உள்ளதோ?!!!!

1 comment: