Wednesday, March 24, 2010

காதல் கட்டளை!!

காதலை எனக்கும்
என்னை காதலுக்கும்
அறிமுகப் படுத்தியவளே!!

முடி கோதும்
உன் விரலசைவில்
என்
இதயத்தின்
ஆணிவேரை அசைத்தவளே!!

தன் இமைக்கைகள் நீட்டியே
என்
விழி உன்னை தேடுதே!!
உன்
ஒரு பார்வை தீண்டியே
என்
உயிர் இங்கே வாழுதே!!

கடல் மறைக்காத
மலை உச்சியே
தீவுகள் ஆவது போல்
என்
மனம் மறைக்காத
உன் நினைவுகளே
காதலாய் ஆனதடி!!
காதலால்
கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போனதடி!!

சிந்திக்கும் நேரத்தில்
சிந்திவிழும் வார்த்தைகள்
உன்னை
சந்திக்கும் நேரத்தில்
மௌனமாய் ஆவதுஏன்??
எதிர்பாராமல்
விழி நான்கும் பார்க்கையிலே-நீ
விலகித்தான் போவது ஏன்?

புளிப்பும் துவர்ப்பும்
கர்பவதி நேசிப்பது!
உன்
சிரிப்பும் காதலும் தான்- இந்த
காதலன் நான் யாசிப்பது!!

தீந்தமிழ் சொல்லாலே
திறவாத இதழ் திறந்து
உம்மென்று சொல்லிவிடு
ஒரு வார்த்தை!! - அந்த
வார்த்தையின் முற்றத்தில் - உருவாகும்
நமக்கான புது வாழ்க்கை!!

உன்
புருவங்கள் இணைக்கும்
கம்பிக் குங்குமத்தையும்!
நம் நிழல்
உருவங்கள் இணைக்கும்
அந்திவெயில் மாலையையும்!
நான்
கவிதையில் பதிகிறேன் கொஞ்சம்!!
கொஞ்சமே என்றாலும்
கொள்ளியிலும் மறக்காது என் நெஞ்சம்!!

உலகக் காதல்
நமக்கே நமக்கென்று
மிச்சமாய் உள்ளதடி!!
மிச்சத்தின் துணைக் கொண்டு
காதலின்
உச்சத்தை தொட்டிடுவோம்!!
காற்றுக்கும் கடலுக்கும்
நம் பெயரை பாடிட
கட்டளைகள் இட்டுடுவோம்!!




உன் அழகின் வீரியம்!!

மின்மினி கண்களில்
மின்னலென சிரிக்கிறாய்!
இலைவடிவ இதயத்தை-ஏன்
உளியென இடிக்கிறாய்?
துப்பட்டா முனைகளில்
என்னுலகத்தை முடிகிறாய்!
இமைத்திடும் நேரத்தில்
என்னுள்ளே காதலை செலுத்தினாய்!!
அணுக்களால் ஆனது உடம்பென்று
விஞ்ஞானம் சொன்னது!
அது உன்னிடம் மட்டுமே- தன்
தோல்வியை ஏற்றது!!
பனிமலர் இதழெடுத்து
பாலொளி நிலா குழைத்து
பெண்ணென படைத்ததை
அணுக்களால் ஆனதேன்றா
அறியாமல் சொல்வது?
மேனகைக்கும் இல்லாத
மேலான பாதங்கள்
நிலத்தினில் படலாமா?
பூக்களின் இதழ் தெளித்து
நீ நடந்திட
பாயென தரலாமா?
அதரத்தின் ஓரத்தில்
அதுஎன்ன சிரிப்போ?
ஆண்டனியை வீழ்த்திட்ட
கிளியோபாட்ரா நினைப்போ?
திமிரிடும் அழகினை-அன்பே
திட்டி வை!!
என்னையே உடைக்கிறது-கொஞ்சமேனும்
குட்டி வை!!



Wednesday, March 10, 2010

கொட்டு முரசே!!

திசைகள் எட்டும் ஒளிரட்டும் - வாழ்வின்
தீமைகள் எல்லாம் பொசுங்கட்டும்!!
எங்களுக்கான
சட்டங்கள் பிறந்ததென்று
சத்தமாய் கொட்டு முரசே!!

எண்ணெய் பிசுக்கான
எங்கள் கைகள்
வானத்தின் நீலத்தில்
தவழட்டும்!!
உயர்ந்திட்ட கைகள்
தங்கள் இருப்பை - இந்த
உலகத்தில் பதிக்கட்டும்!!
கொட்டு முரசே!!

கண்ணீரின் துவாரங்கள்
காணமல் போகட்டும்!!
கட்டுக்குள் இருந்த
காற்று - இன்று
தன்
விலங்கினை விலக்கட்டும்
கொட்டு முரசே!!

பாண்டி ஆட்டத்தில்
கோடுகள் தாண்டிய
பாதங்கள்
பொருளாதார கட்டுக்குள்
பொருத்தது போதுமென்று
கொட்டு முரசே!!

மதமென்னும் பெயராலே
எங்கள் வானத்தை
மறைத்த
சடங்கென்ற கூரைகள்
சட்டென்று சரியட்டும்
சந்தோசமாய் கொட்டு முரசே!!

மெல்லினத்தின் போராட்டம்
ஆதிக்க பிசாசின்
இரும்புத் திரையை
இல்லாமல் செய்ததென்று
எல்லாருக்கும் கொட்டு முரசே!!

அடுக்களை பறவையின்
அறியாமை போக்கிட!!
மக்களவை சூட்சமம்
மகளிரும் புரிந்திட!!
மசோதா நிறைவேறியதை
மத்தளமாய் கொட்டு முரசே!!

வீட்டுக்குள்
பூ கட்டிய இனங்களுக்கும்
இன்று
பூமாலை சூட்டிட
புதுநாளோன்று
பூத்ததேன்று கொட்டு முரசே!!

நுற்றாண்டு பழிச்சொல்
நொடியினில் தீர்ந்ததை!!
ஜடமென்ற புராணங்களுக்கு
சவுக்கடி கிடைத்ததை
செவிப்பறையில் கொட்டு முரசே!!

தடையில்லா எங்கள் கால்கள்
தடமாறி செல்லுமென்ற
பாமர பயங்களை
புறந்தள்ளி புறப்பட்டோமென்று - எங்கள்
புகழ்பாட கொட்டு முரசே!!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியதை கொண்டாடும் மகளிருக்கு மகளிர் தின வாழ்த்துக்கள்......

விடிந்தது இரவு!!!!

பெண்!!
நம்
வாழ்கையின் ஒவ்வொரு நொடியையும்
பூரணமாக்கும் வரம்!!!
ஒவ்வொரு நிகழ்வுகளையும்
சாத்தியமாக்கும் பலம்!!

அடுக்களை தேசத்தில்
அடிமையாய் இருந்தவள்!
இன்று
சுதந்திர வானத்தில்
சிறகுகள் விரிகிறாள்!

உயிர்களை உற்பத்தி செய்யும்
தொழிற்சாலை மட்டுமல்ல தாங்களேன்று
உலகிற்கு உணர்த்திவிட்டாள்!!
கல்வியின் துணைகொண்டு
ஆணாதிக்க சமூகத்தின்
நூற்றாண்டு இருளை
நொடியினில் விரட்டிவிட்டாள்!!

கால் பதித்த துறையிலெல்லாம்
விஸ்வரூபம் காட்டிவிட்டாள்!!
ஆணுக்கு பெண் சமம் என்பதை
பெண்ணுக்கே ஆண் சமமென்று ஆக்கிவிட்டாள்!!

சீதை நளாயினி கண்ணகி என்னும்
முதுமக்கள் தாழிகளை பரணில் ஏற்றிவிட்டாள்!!
அவ்விடங்களில்
மங்கம்மாள் வேலுநாசியார் நாகம்மை
மணியம்மை என்னும் வீரத் திலகங்களை
மாற்றிவிட்டாள்!!

சுய சிந்தனையற்றவள் என்று
புராணங்கள் செப்பியதை - தன்
அறிவாலே பொசுக்கி விட்டாள்!!
தம் பாதங்கள் பயணிக்க
பாதையினை விசாலமாக்கி கொண்டாள்!!

பூவோடும் நதியோடும்
ஒப்பிட்டு வந்தவர்களை
புயலுக்கும் பெண் பெயரை
வைக்கும் நிலை செய்துவிட்டாள்!!
மெல்லினத்தின் அடையாளம் உடலுக்கே
உணர்வுக்கு இல்லையென்று ஊருக்கு சொல்லிவிட்டாள்!!

நூற்றில் அறுபது சதம்
இவ்வாறு இருக்கையில்
நாற்பது சதம்
எதிர்மறையாய் இருக்கிறதே!!!!!!!!!

வல்லரசாகும் வேகத்தில்
நடைப்போடும் பாரதமே
பெண்ணினத்தை உயர்த்தாமல்
நீ வல்லரசாகும் சாத்தியமுண்டோ?

33%
கேட்பதே குறைவுதான்
கேட்பதையெனும் கொடுத்துவிடு!!
இல்லையேல் - உன்
வல்லரசு கனவினை
வழித்து எறிந்துவிடு!!

உலகத்து ஆண்களே!!!
பெண்ணின் வாழ்க்கைக்கு
வேலி கட்டி வைத்தவர்களே!!
ஆதிக்க எண்ணத்தை
அடியோடு எரியுங்கள்!!
மோகத்தில் மட்டுமல்ல - நம்
சோகத்திலும் பங்கேற்பவளை
சமமாக மதியுங்கள்!!

உலகத்து பெண்களே!!
பாரதிக்கும் பெரியாருக்கும்
பலித்து விட்ட கனவுகளே!!!
ஒவ்வொரு பூவுக்குள்ளும்
தேன்த்துளி மாதிரி
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும்
நெருப்பொன்று உள்ளது!!
அதை
திரியில் பொருத்துங்கள்
தீபமாய் ஒளிரட்டும்!!
அகிலத்திற்கு - பெண்கள்
அடிமையில்லை என்பதை
கம்பீரமாய் மொழியட்டும்!!


சென்ற வருட மகளீர் தினத்தில் எழுதியது

Tuesday, March 9, 2010

அம்மா

தண்ணீர் குடம் உடைத்து - நீ
தரையில் பிறந்த நாள்முதல்
தன்னை நினைக்க மறந்தவள்!

உதடு பிரித்து - நீ
உணவு கேட்கும் முன்
உதிரம் பிரித்து பாலாய் தந்தவள்!

கால்கள் நிமிர்த்தி - நீ
காலம் வெல்ல தொடங்கியும்
கண்ணின் மணியாய் உன்னைக் காப்பாள்!

முட்டிய கண்ணீர் - உன்
முகம் கடக்கும் முன்
முந்தானை சூட்டில் உலரச் செய்பவள்!

நோயில் படுத்தாலும் - நீ
நூறாண்டு வாழ சாமிக்கு
நேர்ததிக் கடன் எடுக்கும் ஜீவனவள்!

மணக்கும் சமையலில் - புளி
மஞ்சள் மிளகாய் உப்போடு
மனதின் பாசத்தையும் சேர்த்தே கலப்பவள்!

ஏதோ குழந்தை - அது
எங்கோ அழுதாலும் தான்
இதயத்தில் உன்னை உருவகம் செய்பவள்!

மகிழ்ச்சியோ வலியோ - அவள்
மடி சாய்கையில் தன்
மெல்லிய விரல்களால் தலை கோதுபவள்!

விரல்களின் கோதலில் - நம்
விழிகளின் வழியே மனதின்
விலகாத துயரத்தையும் விரட்டி அடிப்பவள்!

கனிந்த நெஞ்சமும் - இரு
கண்களிலும் பாசத்தை சுமப்வளை
கடவுள் என்று தவராய் சொல்வதோ?!

உலகை படைத்தவனையும் - இந்த
உலகை அழிப்பாவனையும் விடவும்
உயர்ந்தவள் என்றால் தவறேதும் உள்ளதோ?!!!!