Wednesday, June 30, 2010

உன் நினைவில்!

புலன் ஐந்தை

புதுப்பிக்கும்

புல்வெளியில் படுத்திருந்தேன்!!

பூஞ்சாரல் மேகமில்லா

புதுவானம் பார்த்திருந்தேன்!!

பூப்போல உன்முகம்-என்

நினைவெளியில் வந்தவுடன்!

ஓர்வண்ண வானத்தில் -நான்

ஏழ் வண்ணம் பார்த்திருந்தேன்!!

பல்லவ சிற்பங்கள்-என்னை

பகடியாய் பார்த்திருக்க

பாறையின் இடுக்கிலும்-உன்

பால்முகம் ரசித்திருந்தேன்!!

காலில்லா காற்றுக்கு

சலங்கைகள் கட்டிவிட்டு - அதன்

ஜதி சொல்லும் பாதத்தில்-உன்

சுவடுகள் பார்த்திருந்தேன்!!

திசை எட்டும் உன் பிம்பம்

தீபம் போல் ஒளிர்ந்திருக்க!!

என் கண்ணீரின் தடத்தை

காதலால் அடைத்திருந்தேன்!!

எங்கேயோ ராகங்கள்

ஒலியினில் சேர்ந்திருக்க

பெயரில்லா ரகத்திற்கு-நான்

வார்த்தைகள் அடுக்கிவைத்தேன்!!

கடல் கொண்ட அக்கரையை

காவலுக்கு வைத்துவிட்டு!

உன் பிரிவால் நான் மட்டும்

இக்கரையில் வாடுகிறேன்!!

எத்தனையோ நாளாகியும்

எட்டாத நிலா பிடிக்க

ஆர்பரிக்கும் அலைகளுக்கு-நான்

ஆதரவாய் நிற்கின்றேன்!!

இயற்கையிடம் பேசுவதாய்

இதயத்தை சொல்லிவிட்டு

எழுத்துக்கள் கோர்துவைத்து-உன்னை

எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்!!

======================================================

வங்காள விரிகுடாவின் வயிட்ட்றுப் பகுதியான மாமல்லபுரத்து கடற்கரையில் அமர்ந்து எழுதியது.

======================================================

பழைய நொடிகளும் முகங்களும்

கடந்த நாட்களை

திரும்பிப் பார்க்கிறேன்

என்

ஞாபக குளமெங்கிலும்

நீரலையாய்

நினைவலைகள்!!

மார்கழிப் பனியில்

அம்மா கோலம் போடுகையில்

காதை மூடியபடி-வாசலில்

அமர்ந்திருந்ததும்!!

அம்மிக் கல்லில்

சட்னி

அறிக்கையில்

சிதறிய தேங்காய் சில்லையும்

விலகிய பொட்டுக் கடலையும்

வாயில் போட்டதும்!!

காலாண்டு தேர்வில்

குறைந்த மார்கிற்காய்

அப்பா அடித்ததும்

சற்று நேரத்தில்

அழுகை நிற்க

தேங்காய் பண்

சாப்பிட்டதும்!!

இன்னும்

என் ஞாபக வங்கியில்

இருப்பாய்

இருக்கிறது!!

மூன்றாம் வகுப்பில்

தோழி ஒருத்தி

கன்னத்தில் அறைந்தது

நேற்று

அவளிடம்

சாட்டிங் செய்கையில்

வலித்தது!!

கவலை என்பது தெரியாமல்

காலம் நேரம் அறியாமல்

கையில் கிரிக்கெட் மட்டையுடனும்

கிட்டிப் புல்லுடனும்

திரிந்த நாட்கள்

புது மலராய்-இன்னும்

புத்திக்குள் மனகிறது!!

ஒன்பதாம் வீட்டின்

பெரிய நெற்றி கிழவியும்

எங்களை கடக்கையில்

ஓரக் கண்ணால் பார்த்த

அந்த

கோல்டா பொண்ணும்

இன்னும்

என் நினைவு வெளிகளில்!!

பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும்

சிறகுகள் முளைத்த பறவையாய்

கனவுகளோடு

கல்லூரிக்குள் நுழைந்ததும்!

அங்கே சொர்க்கம் இல்லாத போதும்

சுதந்திரமாக இருந்த நொடிகளும்

இன்னும் பசுமையாய்

என் நெஞ்சுக்குள்!!

சீருடை அணிந்த தேவதைகளில்

ஒருத்தியிடம் மட்டும் மனது லயித்ததும்!!!!

அவளுக்காய் கவிதை வடித்த

காதல் நொடிகளும்!!

அவளிடம்-என்

அன்பை சொல்லமுடியாமல்

தவித்த நொடிகளும்!!

குறிப்பாய்-

இன்னும்

தவிக்கின்ற நொடிகளும்!!

இப்படி

பலதரப்பட்ட

நொடிகளையும்

முகங்களையும்

தனிமையில் இருக்கையில்

நினைத்து பார்க்கிறேன்

என் மனம்

தனிமை துயரை விடுத்து

மழலை குழந்தையாய்

சிரிகிறது!!

கண்களில் கண்ணீருடன்!!