Saturday, February 27, 2010

இதயத்தின் மௌனம்

மலரோடு பிறந்தவளே - என்
மனதோடு கலந்தவளே
விலகியே இருந்தாலும் - என்
விழிகளில் கரைந்தவளே

மருதாணிக் கைகளில் - என்னை
மடித்துக் கொண்டாய்
வெறும் சிரிப்பாலே - குளிர்
வெந்நீரில் தள்ளிவிட்டாய்

படியாத என்னை - ஒரு
பார்வையிலே படியவைத்தாய்
விடியாத இரவுகளில் - என்
விழிகளை விழிக்கவைத்தாய்

இளமைக்கு பரிசாக - நீ
எனக்கு கிடைத்துவிட்டாய்
வளமையான உன்னழகில் - என்னை
வசதியாய் மடித்துவிட்டாய்

சட்டென்று நெஞ்சத்தில் - நீதான்
சம்மனம் போட்டுவிட்டாய்
பட்டென்று பார்த்ததில் - என்னை
பதியாய் உருகவைத்தாய்

சினமான கவிஞன் - என்னை
சிப்பிக்குள் சிறைவைத்தாய்
கனமான கனவுகளை - எந்தன்
கண்களுக்குள் விதைத்துவிட்டாய்

உதயத்தை காண்கையில் - உன்னை
உள்ளத்தில் புள்ளிவைப்பேன்
இதயத்தின் எண்ணத்தை - உன்னிடம்
எப்படி சொல்லிவைப்பேன் ?

காதல் கண்ணாடி

காதல் என்னும்
கண்ணாடி கொண்டு
பூமியை பாருங்கள்

வெட்டவெளி நிலமெல்லாம்
வெள்ளை பூக்கள் மலர்ந்திருக்கும்!
உச்சி வெயில் வேளையிலும்
வெண்ணிலா சிரித்திருக்கும்!

கடற்கரை மணல் எங்கும்
ரோஜாப் பூ பாய் விரிக்கும்!
காதலர்கள் விரல்களெல்லாம்
கவிதையால் மொழி வளர்க்கும்!

காதலியின் கழுத்து சங்கிலியில்
அவளது பற்களின் தடமிருக்கும்!
காதலன் அவன் கனவுக்குள்
காதலிக்கு மட்டுமே இடமிருக்கும்!

அணுகுண்டே விழுந்தாலும்
அவர்களுக்கு மட்டும்
ஆரவாரமில்லா இடங்கிடைக்கும்!

தொலைபேசிக் கூட்டுக்குள்ளே
அவர்களது
இதயத்தின் துடிப்பிருக்கும்!

விழிகளுக்கும் மூளைக்கும்
இடைவெளிகள் நீண்டிருக்கும்!
காதலர்களின்
பாதப் பள்ளத்தில் தான்
இந்த
பூமியே சுழன்றிருக்கும்!

பசியும் கவலையும் இவர்களுக்கு
பயந்து எங்கோ ஒளிந்திருக்கும்!
பூங்காவின் எல்லைகள் இன்னும்
இவர்களால் வளர்ந்திருக்கும்!

கறையுள்ள நிலவைப் போல
சில காதலிலே
காமமும் கலந்திருக்கும்!
என்றாலும்
அந்த காமத்தை காதலே
வென்றிருக்கும்!

காதலெனும் மொழியிடம் தான்
உலகக் கவிஞர்களுக்கு
சொற்கள் கிடைக்கும்!
அந்த
காதலனே கவிஞன் என்றால்
காதல் மொழிகளுக்கு
கிளைகள் முளைக்கும்!

காதலர்களின்
இதழ் கடக்கும் சொற்களெல்லாம்
காதலிலே நனைந்திருக்கும்!
சிறு ஊடலெனும் நெருப்பில் தான்
அந்த சொற்களெல்லாம் காய்ந்திருக்கும்!

அறியாத பயமொன்று
மனதுக்குள் மணியடிக்கும்!
என்றாலும் அதையே தான்
இரு இதயம் ரசித்திருக்கும்!

புவி ஈர்ப்பின் துணையாலே
கடலென்றும் கரை தாண்டாதிருக்கும்!
அந்த புவி ஈர்ப்பே
இந்த காதலாலே நிலைத்திருக்கும்!

ஆகையினால்,
காதல் என்னும்
கண்ணாடி கொண்டு - இந்த
பூமியை பாருங்கள்........

உடையட்டும் அன்று

வண்ணம் தீர்ந்த வானவில்
வற்றித் தொலைந்த பெருங்கடல்
தேன் இல்லாத பூக்கள்
தேர் இல்லாத கடவுள்
சுழன்று முடித்த பூமி
சுடுவதை மறந்த சூரியன்
இவைகளை எல்லாம்
உலகம் காணும் நாளில்
உடையட்டும் நம் காதல்!!!!

தமிழ் வணக்கம்

ஆயிரம் பெரியோர்
அவர்தம் திருவாயில்
அழகாய் அமர்ந்து
அகிலம் ஆளும்
தமிழே!

எழுத்தாய் பிறந்து
சொல்லாய் வளர்ந்து
செய்யுளாய் விரிந்து
உரைநடையாய் உயர்ந்து-பின்
எங்கள்
உயிராய் ஆன
தமிழே!

தெய்வங்களை பாடிய பெரியோர்
தேவர்களை ஏற்றிய பெரியோர்
காவியங்கள் இயற்றிய பெரியோர்- பின்னர்
காதலை பாடும் பெரியோர்-இந்த வரிசையில்
என்னையும் எழுத தூண்டிய
தமிழே!

இயலாய்!
இசையாய்!
நாடகமாய்!
நான் கண்ட
முத்தமிழே!

என்
கற்பனை என்னும்
கால்வாயை
கவிதை கடலில்
சங்கமிக்க வைத்த
தமிழே!

உனக்கு
என் கவிதையால்
செய்கிறேன்
தமிழ் வணக்கம்!

என்றென்றும்
உனக்கே
என்
முதல் வணக்கம்!!

Tuesday, February 16, 2010

வருகிறேன்

அன்புடையீர்,

வணக்கம். தொண்டர்களின் எண்ணிக்கையை விட தலைவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கும் இந்த உலகத்தில், அதற்கு சற்றும் குறைவில்லாத மற்றுமொன்று, கவிதை படிப்பவர்களை விட கவிதை செய்பவர்களின் எண்ணிக்கை இன்று அதிகம். இன்று முதல் அந்த எண்ணிக்கை ஒன்று கூடுகிறது, எனது வருகையால்.

கவிதை செய்யும் பித்தர் களின் கூட்டத்தில் புதிதாய் இணையும் பித்தன் நான், மனிதர்களின் பாவங்களை விரும்பி ஏற்ற ஏசு பிரானை போலவே நானும் இந்த பட்டத்தை விரும்பியே ஏற்கிறேன். அதன் பயனாக வருகின்ற கவிதையை பதிய இந்த வலை பூவை களமாக்கி கொள்கிறேன்.

நான், எனது எண்ணங்களை பதிவதர்க்கு கவிதையை தேர்ந்தெடுத்ததற்கு காரணம்: ஒரு பௌதிக விதியை இலகுவாக விளக்க உதவும கணிதத்தை போலவே எனக்கு கவிதை இருந்ததனால் மட்டுமே.

இது வரை நான் மட்டுமே ரசித்து வந்த எனது கவிதைகளை (நான் மட்டுமாவது ரசித்து வந்தேனே!!) உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். மிகப்பெரிய இந்த பிரபஞ்சத்தில் தனக்கான இடம் தேடும் ஒரு சிட்டுக்குருவியின் உணர்வோடு.


விரைவில் கவிதைகளுடன் உங்களை சந்திக்க வருகிறேன்!!!

கார்த்திக்