Saturday, February 27, 2010

காதல் கண்ணாடி

காதல் என்னும்
கண்ணாடி கொண்டு
பூமியை பாருங்கள்

வெட்டவெளி நிலமெல்லாம்
வெள்ளை பூக்கள் மலர்ந்திருக்கும்!
உச்சி வெயில் வேளையிலும்
வெண்ணிலா சிரித்திருக்கும்!

கடற்கரை மணல் எங்கும்
ரோஜாப் பூ பாய் விரிக்கும்!
காதலர்கள் விரல்களெல்லாம்
கவிதையால் மொழி வளர்க்கும்!

காதலியின் கழுத்து சங்கிலியில்
அவளது பற்களின் தடமிருக்கும்!
காதலன் அவன் கனவுக்குள்
காதலிக்கு மட்டுமே இடமிருக்கும்!

அணுகுண்டே விழுந்தாலும்
அவர்களுக்கு மட்டும்
ஆரவாரமில்லா இடங்கிடைக்கும்!

தொலைபேசிக் கூட்டுக்குள்ளே
அவர்களது
இதயத்தின் துடிப்பிருக்கும்!

விழிகளுக்கும் மூளைக்கும்
இடைவெளிகள் நீண்டிருக்கும்!
காதலர்களின்
பாதப் பள்ளத்தில் தான்
இந்த
பூமியே சுழன்றிருக்கும்!

பசியும் கவலையும் இவர்களுக்கு
பயந்து எங்கோ ஒளிந்திருக்கும்!
பூங்காவின் எல்லைகள் இன்னும்
இவர்களால் வளர்ந்திருக்கும்!

கறையுள்ள நிலவைப் போல
சில காதலிலே
காமமும் கலந்திருக்கும்!
என்றாலும்
அந்த காமத்தை காதலே
வென்றிருக்கும்!

காதலெனும் மொழியிடம் தான்
உலகக் கவிஞர்களுக்கு
சொற்கள் கிடைக்கும்!
அந்த
காதலனே கவிஞன் என்றால்
காதல் மொழிகளுக்கு
கிளைகள் முளைக்கும்!

காதலர்களின்
இதழ் கடக்கும் சொற்களெல்லாம்
காதலிலே நனைந்திருக்கும்!
சிறு ஊடலெனும் நெருப்பில் தான்
அந்த சொற்களெல்லாம் காய்ந்திருக்கும்!

அறியாத பயமொன்று
மனதுக்குள் மணியடிக்கும்!
என்றாலும் அதையே தான்
இரு இதயம் ரசித்திருக்கும்!

புவி ஈர்ப்பின் துணையாலே
கடலென்றும் கரை தாண்டாதிருக்கும்!
அந்த புவி ஈர்ப்பே
இந்த காதலாலே நிலைத்திருக்கும்!

ஆகையினால்,
காதல் என்னும்
கண்ணாடி கொண்டு - இந்த
பூமியை பாருங்கள்........

No comments:

Post a Comment